கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த எலும்பு பகுதிகள், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் சைட்டம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர்.
தாஜூதீன் கொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு சைட்டம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எலும்புகளில் வசீம் தாஜூதீனின் எலும்பு பகுதி காணப்பட்டதா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது எலும்புகள் பல காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரகசிய காவற்துறையினர் மற்றும் மருத்துவ சபையினர் விசாரiணை மேற்கொண்டனர்.
இதன்போது இரகசிய காவற்துறையினர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறை பணியாளர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றனர்.
இதன்படி, தாங்கள், ஆனந்த சமரசேகரவின் பணிப்புரையின் படி தாஜூதீனின் சில எலும்பு பாகங்கள் உடலில் இருந்து நீக்கியதாக குறிப்பிட்டனர்.
இந்தநிலையில், காணாமல் போனதாக கூறப்படும் எலும்புகள் அவையே என, சம்பவசம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உப காவற்துறை பரிசோதகர் ஒருவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நரஹேன்பிட்டிய காவல்நிலையத்தின் குற்றவிசாரணை பிரிவின் முன்னாள் பொருப்பதிகாரி சுமித் ஷம்பிக்கவையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.