கோவை அருகே மேலும் ஒரு யானை மர்ம மரணம்

598 0

29-1454048455-elephant-dead-345கோவையில், ரயிலில் அடிபட்டு இறந்த பெண் யானை, வனத்துறையால் பிடிக்கப்பட்ட மகராஜ் ஆண் யானை இறப்பு ஆகியவற்றை அடுத்து மேலும் ஒரு ஆண் யானை இறந்துள்ளது.
மயக்க ஊசியால் தான் யானை இறந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ளது பில்லூர் அணை. இதனை சுற்றியுள்ள வனப் பகுதியில் கேரள எல்லையை ஒட்டியுள்ள எழுத்துக்கல்புதூர் என்ற தமிழகப் பகுதியில் நேற்று காலை 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
இந்த யானை இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்புவரை பில்லூர் அணையை வந்தடையும் பவானி ஆற்றின் மறுகரையில் கேரள மாநிலம் அட்டபாடி வனப் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது.
அதன் முன்பக்க கால்களுக்கு மேல் பகுதியில் காயம் ஏற்பட்டு சிரமத்துடன் நடந்துகொண்டிருந்தது என வனத்துறையினருக்குத் தெரியவந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களின் உதவியோடு யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தியுள்ளனர்.
யானை மயங்கிய பிறகு அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்து, பின்னர் மயக்கம் தெளியும் மருந்தையும் ஊசி மூலம் செலுத்தி காட்டுக்குள் அனுப்பியுள்ளனர்.
அதன் பிறகு இந்த யானை பவானி ஆற்றைக் கடந்து தமிழக வனப் பகுதிக்குள் நுழைந்து இறந்துள்ளது.
கூடுதலான மயக்க மருந்தால் யானை இறந்ததா? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர் இயற்கை ஆர்வலர்கள், அதேநேரம், யானையின் உடலில் ஒரே ஒரு இடத்தில் உள்ள பெரிய காயம், பிற காட்டு யானைகளோடு மோதியதால் ஏற்பட்டிருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 20 மற்றும், 21ஆம் திகதிகளில் அடுத்தடுத்து 2 யானைகள் இறந்ததையொட்டி சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு யானை இறந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் எனத்தெரிகிறது.

Leave a comment