ஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், 1980-ம் ஆண்டு ஈரானை ஆக்கிரமித்ததால் இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து ஈரானில் உள்ள அவாஸ் நகரில் கடந்த 22-ந் தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.இந்த தாக்குதலுக்கு அரபு பிரிவினைவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது