சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓராண்டில் ரூ.346 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

313 0

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றிட இந்த ஓராண்டில் ரூ.346 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுண்வழி சிகிச்சை துறை சார்பில் தொடர் மருத்துவ கல்வி நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நுண்வழி அறுவை சிகிச்சை துறைக்கு புத்தகம், கணினி மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கிய கொடையாளர்களை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கவுரவித்தார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.100 கோடி செலவில் புற நோயாளிகளுக்காக 3-வது டவர் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றிட இந்த ஓராண்டில் ரூ.346 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தமிழக அரசு எந்த வகையிலும் காலதாமதம் செய்யவில்லை. நிலம், மின்சாரம் உள்ளிட்ட தடையில்லா சான்றிதழை தமிழக அரசின் சார்பில் எய்ம்சுக்கு வழங்கியுள்ளோம்.

திருவள்ளூர், தேனி, காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிவதாக கூறுகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment