தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்

4927 0

தோட்டதொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உடன் தலையிட்டு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா உதவி செயலாளருமான டி. வி. சென்னன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்: ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்திலேயே பெருந்தோட்டங்கள் கம்பனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க ஒப்பந்தத்தை மேற்கொண்டார்.

இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சி காலத்தில் தோட்டங்கள் நட்டத்தில் இயங்கியதுடன் பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்தவர்கள் தோட்ட  த்தியோகத்தர்களாக பெருவாரியாக நியமிக்கப்பட்டனர். இதனால் தோட்ட மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் தோட்டங்களை நிருவகிக்கும் பொறுப்பு கம்பனிகளுக்கு வழங்கப்பட்டது இதை இ.தொ.கா தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளவில்லை தோட்ட நிர்வாகம் கம்பனி பொறுப்பில் வந்தாலும் தோட்ட லயன் குடியிருப்புக்கள், ஆலயங்கள் என்பன கம்பனி நிருவாகத்திற்குள் வராமல் சுயமாக இயங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போதைய ஜனாதிபதி பிரேமதாச இவ்விடயத்தை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும் இதற்கு பொறுப்பாக தோட்டங்களின் முகாமையாளர்கள் செயற்பட தொடங்கியதால் அத்திட்டம் நடைமுறையில் வரவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் கம்பனிகள் இன்று தோட்ட தொழிலாளர்களின் அனைத்து நலன் விடயங்களிலும் புறக்கணிப்பையே மேற்கொண்டு வருகின்றன. புதிய சம்பள கூட்டு உடன்படிக்கையிலும் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் கையை விரித்துள்ளன.

தற்போதைய நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தொழிலாளர்களுக்கு அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவிற்கேற்ப 1000 ரூபாவிற்கு அதிகமான சம்பளத்தை நாளொன்றிற்கு பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். ஐ.தே.க வின் பொறுப்பிலே தொழிலமைச்சு உட்பட முக்கிய அமைச்சுகள் உள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் மேடைகளில் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என பகிரங்கமாக அறிவித்துள்ளார். மலையக

தொழிற்சங்கங்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளன. எனவே இவ்விடயத்தில் பிரதமர் உடன் தலையிட்டு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Leave a comment