தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் அறப்போர் நடத்திய நல்லூரின் வடக்கு வீதியிலும், தெற்கு வீதியில் அமைந்துள்ள நினைவுத்தூபியிலும் இன்று காலை 10.48 மணிக்கு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆரம்பத்தில் வடக்கு வீதியில் அறப்போரில் ஈடுபட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சேதமாக்கப்பட்ட நினைவிடத்தில் கற்பூரம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.அதனையடுத்து நினைவுத்தூபியில் பொதுச்சுடர், ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றி வைத்தனர்.தொடர்ந்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
திலீபனின் 31ஆவது நினைவேந்தலுக்கு கைதடியிலிருந்து இரு இளைஞர்கள் தூக்குக் காவடி எடுத்து நல்லூரின் முன்பாக நிறைவு செய்துள்ளனர். 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட பின்னர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செப்டெம்பர் 15ஆம் திகதி அறப் போர் நடத்தி 12ஆம் நாள் வீரச்சாவடைந்து 31ஆவது ஆண்டு நிறைவு இன்றைய தினம் நினைவு கூரப்பட்டது.