அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் கீழ் 578 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 49 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அதன்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் (மகளிர் திட்டம்) சார்பில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 250 பேருக்கு ஸ்கூட்டர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 125 பயனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கான ஆணை, சமூக நலத்துறையின் சார்பில் 203 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சாந்தி, முன்னாள் எம்.பி. சையதுகான், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜ், மலர்விழி், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.