ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சக விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல இயக்குனரக என்ஜினீயர் வரலட்சுமி ஆகிய 3 பேரை கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாய குழு தூத்துக்குடியில் நேற்று முன்தினம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தியது.
இந்த குழுவினர் சென்னை எழிலக வளாகத்தில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தினர். இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, செய்தி தொடர்பாளர் வக்கீல் நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.அர்ஜுனன், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வக்கீல் பி.எஸ்.ராமன் தலைமையிலான வக்கீல் குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மகளிர் அணி சார்பில் பேரவையின் தலைமை நிலைய செயலாளர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்களை வழங்கினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எஸ்.தியாகராஜன், வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.டி.பொன்ராஜ், உடன்குடி வட்டார விவசாயிகள் மற்றும் பசுமை நல ஆர்வலர் நலச்சங்க தலைவர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி அந்த பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் இருந்து 45 ஆயிரம் மனுக்கள் ஆதார் அட்டை நகலுடன் இணைத்து வழங்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாய குழு கூட்டத்தில் நேற்று ஸ்டெர்லைட் தரப்பு வக்கீல்களின் வாதங்கள் மட்டுமே நடைபெற்றது. அவர்களின் வாதத்துக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்கள் தரப்புக்கும் கருத்து தெரிவிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அக்டோபர் 5-ந்தேதி எதிர்தரப்பினர் கருத்துகளை தெரிவிக்க மீண்டும் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் சில தொழில் அதிபர்கள், ஒன்றிரண்டு வியாபாரிகள் மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களை அழைத்து வந்திருந்தது. அவர்கள் ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் தங்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சொன்னார்கள். அதோடு விசாரணை முடிவடைந்தது.
அப்போது நான், நீங்கள் ஸ்டெர்லைட்டின் குரலை கேட்டீர்கள். ஆலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரலை, விவசாயிகள் குரலை நீங்கள் கேட்க வேண்டும் என்றேன். அதற்கு நீதிபதி தருண் அகர்வால், அக்டோபர் 5-ந்தேதி உங்கள் தரப்பு வாதங்களையும் கேட்கிறோம் என்று கூறியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலை தனது பொருளாதார பலத்தை கொண்டு மனுக்களை கொடுத்திருக்கிறது. ஆனால், தூத்துக்குடியில் உள்ள 5 லட்சம் மக்களின் குரல் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலை மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் எங்களை மனு கொடுக்கவிடாமல் எதிர்தரப்பினர் தடுத்துவிட்டனர். எனவே இங்கு வந்து 45 ஆயிரம் மனுக்களை வழங்கி உள்ளோம். இதன் நகலை முதல்-அமைச்சரிடம் வழங்க இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்களை சார்ந்த தொழில்கள் குறைந்துள்ளது. சுற்றுவட்டார கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, பல கடைகள் மூடப்பட்டுள்ளன.
எங்கள் ஒப்பந்ததாரர்கள் குழந்தைகளை படிக்கவைக்க சிரமப்படுகின்றனர். ஆலையை மூடியதால் நேரடியாக 4 ஆயிரம் பேரும், மறைமுகமாக 1 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் கோரிக்கை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெயக்குமார், அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில ஆலோசகர் கீதா ஆகியோர் நேற்று பிற்பகலில் வந்தனர். ஆனால் குழுவினர் மதியமே சென்றுவிட்டதால் தீர்ப்பாய பதிவாளரிடம் அவர்கள் மனு கொடுத்தனர்.
பின்னர் ஆர்.நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது, “ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசு முடிவின்படி நிரந்தரமாக மூடப்பட வேண்டும். துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்களுக்கு போதுமான நஷ்டஈடு வழங்க வேண்டும். பொய்யாக வழக்கு போடப்பட்டவர்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்” என்றார்.