ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை

244 0
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஏ.லட்சுமணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “இலுப்பநத்தம் கிராமத்தில் எங்களது முன்னோருக்கு சொந்தமான நிலம் இருந்தது. இதற்கு 1931-ம் ஆண்டே பட்டா வழங்கப்பட்டது. இதில் இருந்து 0.46 சென்ட் நிலம் பாகப்பிரிவினை மூலம் எனக்கு கிடைத்தது. இந்த நிலத்துக்கு பட்டா கேட்டு நான் கொடுத்த மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். அந்த நிலம் கரடு புறம்போக்கு நிலம் என்றும் கூறியுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ரகு, மனுதாரர் கூறும் நிலம் கரடு புறம்போக்கு நிலம் என்று கூறி அதற்கு ஆதாரமாக ‘அ’ பதிவேட்டை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வக்கீல் கந்தன்துரைசாமி, ‘அப்பகுதியில் குன்றுகளே இல்லை என்றும், கரடு புறம்போக்கு நிலம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் அந்த நிலத்துக்கு 1931-ம் ஆண்டே பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகளில் உள்ள நிலம் ஆகியவற்றுக்கெல்லாம் பட்டா வழங்க வேண்டும் என்று அரசுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது.
அதேநேரம், மனுதாரர் தன்னிடம் மொத்த நிலத்துக்கான பட்டா உள்ளது என்று கூறுகிறார். அவரிடம் உள்ள பட்டா புத்தகத்தை பெற்று, அவற்றின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். பின்னர் சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இப்போதெல்லாம், ஆவணங்கள், பதிவேடுகளை சரிபார்க்காமலேயே, சில அதிகாரிகள் பட்டா வழங்குவதை வழக்கமான நடைமுறையாக வைத்துள்ளனர். அப்படி வழங்கப்படும் பட்டாக்களை எல்லாம் சரிபார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
தற்போது நிலத்தின் மதிப்புகள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றை மனதில் கொண்டு, அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் உள்ள நிலங்கள் உள்ளிட்டவைகளை விழிப்புடன் இருந்து, சட்டப்படி பாதுகாக்க வேண்டும். பேராசை கொண்ட சில மனிதர்கள், இதுபோன்ற நிலத்தை அபகரிக்க முயற்சிப்பார்கள்.
இதை அனுமதிக்கக்கூடாது. அரசு நிலத்தை அபகரிக்கும் செயல் என்பது கடுமையான குற்றமாகும். இதை அனுமதித்தால், பொதுமக்களின் நலன் கடுமையாக பாதிக்கப்படும். பொது இடம் பொதுநலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எனவே, இதுபோன்ற நிலங்களை ஆக்கிரமித்து இருப்பவர்களை சட்டவிதிகளை பின்பற்றி உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
மேலும், கோவை மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட கலெக்டர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தவேண்டும். அந்த ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றி, சரியான நடவடிக்கை எடுக்காமல் அஜாக்கிரதையாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலம், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் விவகாரத்தில் யார் மீதும் இரக்கம் காட்டாமல், அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடர்பான தகுந்த சுற்றிக்கையை மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், கோவை மாவட்ட கலெக்டர் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment