இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று மாலை பெய்த கடுங்காற்றுடன் கூடிய மழை காரணமாக, பிரதேசங்கள் பலவற்றுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதலங்கல, குட்டிகல, ஹாகல, ஜூலங்கெட்டில ஆகியப் பிரதேசங்களிலேயே பாரியளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேற்படி பகுதிகளில், நேற்று மாலை 4 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துள்ளதுடன், மினிசூறாவளியும் ஏற்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் நீடித்த மினிசூறாவளியே, பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
20 வீடுகள் பாதிப்பு
வீசிய மினி சூறாவளியால் 20 வீடுகள் பாதிப்படைந்துள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. சில வீடுகளின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு சென்றுள்ளனவெனவும் பாதிக்கப்பட்ட மக்கள், நண்பகர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊருபெரத்த, 15,16,17ஆம் எல, ஹெஹெரகொடெல்ல ஆகிய பிரதேசங்களே, அதிகளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
200 ஏக்கர் வாழைத்தோப்பு சேதம்
மினிசூறாவளியால் 200 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கைபண்ணப்பட்ட வாழைத்தோப்பு சேதமடைந்துள்ளதெனத் தெரிவிக்கும் விவசாயிகள், இதனால் அறுவடைக்குத் தயாராகவிருந்த வாழைக்குலைகள் அனைத்தும் நாசமடைந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டினர்.
இதனால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் அங்கலாய்த்தனர்.
இதேவேளை, தென்னை, இறப்பர், பலா, தேக்கு, புளியமரம் மற்றும் மிகப் பழமையான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மின்னிணைப்பில் பாதிப்பு
பாரிய மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளில் விழுந்ததால், மேற்படி பிரதேசங்களுக்கான மின்னிணைப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் அசமந்தம்
மேற்படி பிரதேசங்களில் நேற்று முன்தினம் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள போதிலும் நேற்றுப் பகல் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஸ்தலத்துக்கு வந்து நிலைமைகளைக் கண்டறியவில்லை என்று, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.