தயாசிறி என்பவர் சூதாட்டக்காரர்களின் தந்தை

329 0

இந்த அரசாங்கமே கிரிக்கெட்டை நாசப்படுத்தியுள்ளது. இந்த நிலைக்கு தயாசிறி அவர்களே பொறுப்புக்கூற வேண்டும். 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. கிரிக்கெட் கீழ்நிலைக்கு செல்ல சூதாட்டக்காரர்களே காரணம் என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற விசேட போய தின நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ´முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறியே தற்போதைய கிரிக்கெட்டின் நிலைக்கு காரணம். அவர்தான் சூதாட்டக்காரர்களை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவந்தவர். இன்று தயாசிறி என்பவர் சூதாட்டக்காரர்களின் தந்தையாவார்.

கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி சூதாட்டக்காரர்களை கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை.

ஆனால் தயாசிறி அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்கெட் சட்டத்தை சரியாக தெரியாமல் கிரிக்கெட் நிர்வாகத்தில் சூதாட்டக்காரர்களை வரவழைத்தார். இன்று சூதாட்டக்காரர்களினாலேயே இந்த கிரிக்கெட் விளையாட்டு சிதைந்துபோய் உள்ளது.

மக்களுக்கு நன்கு தெரியும் யார் இந்த தயாசிறி என்று. நீங்கள் பார்க்கலாம் 2015 ஆம் ஆண்டுக்கு முன் தயாசிறி என்ன பேசினார் என்று. அவர் எமது ஜனாதிபதி முதகெழும்பில்லாதவர் என்று கூறினார். ஆனால் ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வழங்கும் போது முதுகெழும்பு இல்லாமல் அமைச்சுப் பதவியை வாங்கிக்கொண்டார்.

அந்த தயாசிறி பேசவில்லை, சூதாட்டக்கார தயாசிறியே பேசினார். அவரே சூதாட்டக்காரர்களை கிரிக்கெட்டுக்குள் கொண்டுவந்து கிரிக்கெட்டை இல்லாமல் செய்தவர்.

கடந்த காலத்தில் சுசத்திகாவை குறைகூறினார். மாலிங்கவையும் குறை கூறினார். தயாசிறி நினைப்பது அவர் ஒரு சிறந்த வீரர் என்று. தனது உடல் கட்டமைப்பை காட்டி ஒருவர் வீரராக முடியாது. தயாசிறி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதிகொடுத்தார் என சொல்லப்படுகிறதே, எவ்வளவு நிதி போயுள்ளது என்பதை தேடிப்பாருங்கள்.

அந்ந நிதி உண்மையில் விளையாட்டு மைதானம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதா? நான் நினைக்கின்றேன் தயாசிறியை பற்றி என்னிடம் கேட்பதை விட ஜு.எல் பீரிஸ் அல்லது மஹிந்த ராஜபக்ஷவிடம் கேளுங்கள். அவர்கள் சொல்வார்கள் தயாசிறி யார் என்று.

நான் சொன்னேன் நாம் பங்களாதேஷிடம் தோற்போம் என்று அவ்வாறே நடந்தது. நான் ஆறு மாதத்திற்கு முன்னரே சொன்னேன் ஆப்கானிஸ்தானுடன் தோற்போம் என்று. அப்படியே நடந்தது. என்னால் சொல்ல முடியும் இப்படியே போனால் யாரிடம் தோற்போம் என்று. அந்த அளவுக்கு எமது கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றுள்ளது.

ஆனால் எமது வீரர்களை எம்மால் முன்னேற்ற முடியும். நான் இப்போதும் சொல்வது யாப்பினை மாற்றுங்கள். அதன் பின் தேர்தலை நடத்துங்கள். அது வரை தற்காலிக குழுவொன்றை நியமியுங்கள். அப்படி அமைக்க முடியவில்லை என்றால் முன்னாள் வீரர்களை பயன்படுத்தி இதை முன்னேற்றுங்கள்.

தற்போதைய அமைச்சருக்கும் இது தொடர்பான பொறுப்புள்ளது. நான் நினைப்பது எமது நல்லாட்சி அரசிலேயே கிரிக்கெட் கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. உலகக்கிண்ணம் எமக்கு இலகுவாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

இந்த தோல்விக்கு அணித்தலைவரை குறைசொல்ல முடியாது. தெரிவுக்குழு முழுப்பொருப்பையும் ஏற்கவேண்டும்.

ஆசிய கிண்ணத்திற்கு செல்லும் முன் 20 க்கு 20 போட்டிகள் இடம்பெற்றன. ஆனால் நாங்கள் போனது 50 க்கு 50 போட்டிகளுக்கே. எங்கே போனது எமது அறிவு. எமது கிரிக்கெட் நிர்வாகிகள் செய்தது நிதியை பிரித்துக் கொண்டார்கள்.

எமது கிரிக்கெட்டின் நிலைப்பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் கவனிக்க வேண்டும் இல்லையென்றால் தேர்தலில் மக்கள் சிறந்த பாடத்தை எமக்கு கற்பிப்பார்கள்.´ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment