எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது-இ.ஆனல்ட்

34005 0

எமது மக்களுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது. நினைவு கூருவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆனல்ட், அதிகாரிகளை இலக்கு வைத்து வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக பொலிஸார் சதியில் ஈடுபட முயற்சிக்கின்றனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணப் பொலிஸாரால் அதனை தடுக்கும் நோக்குடன் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளரை நீதிமன்றில் நாளை முன்னிலையாகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆர்னோல்ட் நேற்று மாலை அனுப்பி வைத்துள்ள பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாநகர சபையின் முதன்மை நிறைவேற்றுப் பிரதிநிதி என்ற அடிப்படையில் இந்த வழக்கானது மாநகர முதல்வரின் பெயர் குறிப்பிட்டே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

அரச உயர் அதிகாரி மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பது அரச நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் வேணவாக்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதி முயற்சியாகவே எண்ணத் தோன்றுகின்றது.

நாம் மக்களுக்காக குரல் கொடுக்க வந்தவர்கள். மக்களோடு தொடர்புள்ள நிகழ்வுக்கு, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும், நிறைவேற்று அதிகாரப் பிரதிநிதியாக, யாழ்ப்பாணம் மாநகர முதல்வராக நானும் இருக்கின்றபொழுது இந்த விடயங்களுக்கு பொறுப்புக்கூறும்படி அரச அதிகாரிகளைப் பணிப்பது சட்டபூர்வமானதா என்று எண்ணத் தோன்றுகின்றது.

நினைவுநாள் ஏற்பாடுகளை மக்களின் விருப்பின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொள்ளும். நீதிமன்ற நடைமுறைகளை மதித்து இந்த விடயங்களை மாநகர சபை சட்டரீதியாகக் கையாளும்.

எமது மக்களின் விடுதலை வேண்டிய உணர்வுகளை சட்டத்தைக் கொண்டு அல்லது அதிகாரத்தைக் கொண்டு மழுங்கடிக்க முடியாது. தியாகி திலீபனின் நினைவு தினம் எவ்வித மாற்றங்களும் இன்றி நாம் எண்ணியிருந்த அமைப்பிலே இடம்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment