பூகோள விவகாரங்களில் வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல் சிறிலங்கா அமைதி மற்றும் உறுதிப்பாட்டை நோக்கி வேகமாகப் பயணிக்கின்றது.
இந்த மாதம் சிறிலங்கா இராணுவமானது வன்சக்தியைப் பயன்படுத்துவதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வது தொடர்பான பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றை கொழும்பில் நடத்தியது. இதில் கடற்படையினர், விமானப்படையினரும் பங்குகொண்டிருந்தனர்.
1990ல் தென்னிலங்கையில் ஏற்பட்ட மாக்சிய ஜே.வி.பியின் இரண்டு பத்தாண்டு காலக் கிளர்ச்சியை சிறிலங்கா இராணுவத்தினர் வெற்றி கொண்டமைக்கும், 30 ஆண்டுகால தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை சிறிலங்கா இராணுவமானது 2009ல் வெற்றிகொள்வதற்கும் இந்தியாவிடமிருந்தே சில உதவிகள் பெறப்பட்டன என்பதை நாம் மறந்து விடமுடியாது.
தமது நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் சில இராணுவங்கள் வெற்றி பெற்றுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரும் தமது நாட்டில் ஏற்பட்ட பல்வேறு கிளர்ச்சிகளை வேரோடு அழித்துள்ளதுடன் போருக்குப் பின்னான ஐந்து ‘R’ களான மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள்ஒருங்கிணைப்பு மற்றும் மீளிணக்கம் ஆகிய விடயங்களில் பங்களித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இடம்பெற்ற வருடாந்த பாதுகாப்புக் கருத்தரங்குகள் கோத்தா என நன்கு அறியப்படும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் அதிகாரம் மிக்க சகோதரரும் பிரபலமான கஜபா படையணியின் ஓய்வுபெற்ற கேணலுமான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் தலைமையிலேயே முன்னர் இடம்பெறும். இவரது அனுமதியில்லாது எந்தவொரு பணியும் இடம்பெறாது.
2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்,கடந்த செப்ரெம்பர் 01 அன்று ஆரம்பித்த பாதுகாப்புக் கருத்தரங்கை, கோத்தாவின் எதிரியும் இவரால் சிறையில் அடைக்கப்பட்டவருமான, சிங்காப் படையணியைச் சேர்ந்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தலைமை தாங்கி நடத்தியிருந்தார். இதே காலப்பகுதியில் அத்துடன் ஊழல் மோசடிக்காக கோத்தா மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கொழும்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சம்பவமானது சிறிலங்காவின் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ‘கோத்தா சிறைக்குச் செல்வாரா?’ என்கின்ற கேள்வி கொழும்பு வட்டாரங்களில் நிலவுகிறது. ஏனெனில் கோத்தா, ராஜபக்ச மற்றும் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா ஆகிய மூவருமே யுத்தத்தை வெற்றி கொள்வதற்கான பிரதான நபர்களாவர்.
‘புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டமை மற்றும் போரை வெற்றி கொண்ட தலைவர் ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை ஆகிய இரண்டும் நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினையான மீளிணக்கத்திற்கான நிலையான தீர்வொன்றுக்கு வழிவகுத்துள்ளது.
முன்னைய அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்குலகுடனான சிறிலங்காவின் உறவை விரிசலடையச் செய்துள்ளது. இதனை எமது அரசாங்கம் தற்போது சீர்செய்துள்ளது’ என சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவிற்கு அண்மையில் பயணம் செய்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான நகர்வுகளைப் பாராட்டிய போதிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தினரால் மனிதாபிமான நடவடிக்கை எனக் கூறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ருவாண்டா மற்றும் செர்பெனிக்காவில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தேறிய கொடூரத்தை விபரிப்பதற்கு இதைவிட மிகவும் மோசமான ஒப்பீடு வேறெதுவும் இருக்காது எனினும் சிறிலங்காவானது தற்போது எந்தவொரு எதிரியும் இல்லாமல் சமாதானம், நிலைத்தன்மை மற்றும் மீளிணக்கத்தை நோக்கிப் பயணிக்கிறது என சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
பனிப்போர் முடிந்ததன் பின்னர், பிரித்தானியாவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான பீல்ட் மார்சல் லோர்ட் எட்வின் பிராமல் பின்வரும் விடயத்தை என்னிடம் தெரிவித்திருந்தார்: ‘தற்போது எமக்கென எந்தவொரு எதிரியும் இல்லை, நாங்கள் பிறிதொரு எதிரியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளோம்’. என்பதே அதுவாகும்.
12,800 புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் புலிகள் மீண்டும் உருவாவது சாத்தியமற்றது என்கின்ற கருத்து நிலவுகின்ற போதிலும் 2013ல் கிளிநொச்சிக் காடுகளில் இரண்டு புலி உறுப்பினர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் செயற்பட்டமை மற்றும் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் வன்முறை சார் ஆர்ப்பாட்டங்கள் போன்றன இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
புலிகள் மீண்டும் தோன்றுவதென்பது வெறும் கற்பனையே என கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் சாரா டீ சில்வா தெரிவித்தார். தற்போது சிறிலங்கா இராணுவம் எவ்வித சவாலையும் எதிர்நோக்காத நிலையில், இதில் உள்ள 200,000 வரையான படையினரை எதற்குப் பயன்படுத்துவது என்கின்ற கேள்வி உள்ளது.
ராஜபக்ச காலத்தில் சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது இவர்கள் இந்தத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் ஈடுபடுகின்றனர். அதாவது வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான நிவாரணப் பணிகள், வீதிப் புனரமைப்பு, வீடமைப்பு, திருத்தல் வேலைகள் போன்றவற்றில் சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர்.
அத்துடன் வடக்கு கிழக்கில் இராணுவத்தால் விடுதிகள், சுற்றுலா மையங்கள், கோல்ப் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை உருவாக்கி அவற்றின் மூலம் வருமானத்தை ஈட்டுகின்றனர். சிறிலங்கா இராணுவ வசமிருந்த மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு மீளவும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 7000 ஏக்கர் நிலப்பரப்பானது தற்போதும் இராணுவத்தினர் வசம் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத்தினரின் பிரசன்னம் தற்போது குறைந்துள்ளதால் வடக்கில் வாழும் மக்கள் கடந்த காலத்தை விட சுதந்திரமாக வாழ்கின்றனர்.
ஐ.நா அமைதி காத்தல் மற்றும் அனைத்துலக கண்ணிவெடியகற்றல் திட்டங்களுக்கான புதிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. தற்போது, 5000 இற்கும் மேற்பட்ட இராணும் மற்றும் காவற்துறையினர் ஐந்து பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். அதாவது மாலி நோக்கி 750 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் பயணிக்கவுள்ளனர்.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் மேற்குலகுடன் சிறிலங்கா உறவை மேம்படுத்துவதற்கான மையமாக உள்ளது. ஜூலை 24 தொடக்கம் ஆகஸ்ட் 23 வரையான காலப்பகுதியில் 13 கரையோர ஆய்வுப் பிரிவு, ஒரு பசுபிக் கட்டளைக் குழு மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் போன்றன சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளன. பசுபிக் கட்டளை மற்றும் பிராந்திய இராணுவ வல்லுனர்களால் ஒரு வார கால பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கையானது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றது. மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதே இதன் நோக்காக இருந்தது.
வரலாற்று ரீதியாக நோக்கில், இந்தியாவானது சிறிலங்காவுடன் பாதுகாப்பு உதவி மற்றும் இராணுவப் பயிற்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 1500 வரையான படையினருக்கு பயிற்சிகளை இந்தியா வழங்குகிறது. சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதற்காக சிறிலங்காவிற்கான கடற்படைக் கப்பல் கட்டுமானம் உட்பட இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் இந்தியாவானது பல்வேறு பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி வருகிறது.
பூகோள மூலோபய ஈர்ப்பிற்கான ஒரு பிராந்திய மையமாக இந்திய மாக்கடல் மாறியுள்ளது. சிறிலங்கா பல்வேறு முக்கிய கடற்பாதைகள் வழியான தொடர்பாடல்களைப் பேணி வருகிறது. 21ம் நூற்றாண்டானது இந்திய-பசுபிக் நூற்றாண்டாக உள்ளதால் சிறிலங்கா தனது கேந்திர மையத்தின் நலன்களைப் பெற்றுக் கொள்கிறது என சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் அதுல் கெசாப் தெரிவித்திருந்தார்.
இந்திய மாக்கடல் தொடர்பான கடல் சார் மூலோபாயக் கொள்கையை புதுடில்லி மாற்றிவரும் அதேவேளையில், புலிகளைத் தோற்கடித்த சிறிலங்கா தனது கடற்படையின் ஆளுமையை மேலும் விருத்தி செய்ய வேண்டிய நிலையிலுள்ளது. 2014ல் இரு தடவைகள் சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் சிறிலங்காவின் கரையோரத்தில் தரித்து நின்றமையானது இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவில் பாரியதொரு விரிசலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்திய மாக்கடலில் ஏற்படும் பூகோள சக்தி மாற்றம் தொடர்பாக சிங்கப்பூரில் உரை நிகழ்த்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்திய நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்தது. இந்திய மாக்கடலில் எவ்வித மோதல்களும் ஏற்படாத வகையில் இதற்காக வரையப்பட்டுள்ள சட்ட விதிகளை சிறிலங்கா ஆதரிப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். லக்ஸ்மன் கதிர்காமரால் தென்னாசியா தொடர்பாகக் கூறப்பட்ட பிரபலமான வரையறை போன்றே, பிரதமர் விக்கிரமசிங்கவும் இந்திய மாக்கடல் மீதான இந்தியாவின் எழுச்சியும் தென்னாசியாவின் அதிகாரத்துவத்தையும் கோடிட்டுக் காண்பித்திருந்தார்.
சிறிலங்காவின் காலித் துறைமுகத்திற்கும் அம்பாந்தோட்டைத் துறைமுகங்களுக்கும் கீழாக ஒவ்வொரு நாளும் இருநூறு வரையான கப்பல்கள் பயணிக்கின்றன. 2005 – 2007 வரையான காலப்பகுதியில் புலிகள் அமைப்பின் பத்துக் கப்பல்களை மூழ்கடித்த சிறிலங்கா கடற்படையின் தற்போதைய பணியானது மேலும் கடினமாகியுள்ளது.
ஏனெனில் இது தற்போது முக்கிய கடல் வழிகளை மிகவும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய நிலையிலுள்ளது. நவம்பரில் காலியில் இடம்பெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலானது வன் மற்றும் மென்சக்திகளின் தேவைகளை உள்ளடக்கிய இந்திய மாக்கடல் மீதான அதிகாரத்தைத் தீர்மானிப்பதாக இருக்க முடியும்.
வழிமூலம் – The Pioneer
ஆங்கிலத்தில் – மேஜர் ஜெனரல் அசோக் கே. மேத்தா
மொழியாக்கம் – நித்தியபாரதி