விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஒக்டோபர் 5ஆம் திகதிவரை விளக்கமறியல்

355 0

sarath-weerawansa-720x480அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் லங்கா ஜயரத்ன இவ் உத்தரவை பிறப்பித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கடந்த 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி செயலகத்தினால் 12 வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தாக இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்த நிதிக்குற்ற தடுப்பு பிரிவினர், அதில் ஒரு வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத சரத் வீரவன்ச தமது பிரத்தியேக தேவைகளுக்கு பயன்படுத்தி 8.9 மில்லியன் ரூபா நட்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டனர்.

அத்தோடு, 2012ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அமைச்சின் செயலாளராக சரத் வீரவன்ச நியமிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி செயலகத்தால் வாகனம் வழங்கப்பட்டிருந்த போதும், வேறு வாகனத்தை அமைச்சின் தேவைகளுக்காக பயன்படுத்தி எரிபொருள் தேவைக்கென 1.6 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2012ஆம் ஆண்டு வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச பதவி வகித்திருந்ததோடு, அவருக்கு சிறந்த தரத்திலுள்ள வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தபோதும், வேறு வாகனங்களை பயன்படுத்தி எரிபொருள் செலவுக்காகவென பல மில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டுள்ளதாக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.