இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கு இந்திய பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பரை சந்தித்து கலந்துரையாடியபோது இவ்விடயம் குறித்து தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக வடக்கின் மீன்வளம் பாதிக்கப்படுவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக தெரிவித்த ஜனாதிபதி, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தையே ஒரே வழியென்றும் குறிப்பிட்டார். இப்பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் காஷ்மீர் உரி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து பிராந்திய நாடுகள் அதிக சிரத்தையுடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்தோடு, நேற்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்த ஜனாதிபதி மைத்திரி, உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.