‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

375 0

images-1‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

‘எழுக தமிழ்’ எனும் தொனிப்பொருளில் வாழ்வுரிமைக்கான ஜனநாயக போராட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிவுற்று ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தமிழ் மக்களின் வாழ்வியலில் மாற்றமோ ஏற்றமோ நிகழவில்லை.

மாறாக இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோஷத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர்.

ஆகவே நாம் தோற்றுப் போன சமூகம் அல்ல விடுதலை வேள்வி பயணத்தின் இடைக்கால சரிவே தவிர முடிவில்லை. விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும். இலக்கு அடையும் வரை ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளையாகவுள்ளது.

எனவே நூற்றாண்டை அண்மித்துள்ள எமது உரிமைப் போராட்டம் சற்றும் தளர்ந்து விட முடியாது. வடிவங்கள் மாறலாம் இலக்கு ஒன்று தான் இன்றைய நெருக்கடி நிலையை போக்குவதற்கு யாவரும் அணி திரளுங்கள் நல்லாட்சி எனும் மாயையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.