வடக்கில் மாத்திரம் 18,085 மாற்றுத்திறனாளிகள்!

323 0

sbயுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக வடக்கில் மாத்திரம் 18,085பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 4ஆயிரத்து 163பேர் பெறுகின்றபோதிலும், இந்நிலைமைக்கு ஆளாகியுள்ள 11 ஆயிரத்து 625 பேர் எவ்விதக் கொடுப்பனவையும் இதுவரை பெறவில்லை என்ற தகவலையும் வெளியிட்டார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜாவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏனைய மாகாணங்களில் மாகாண சபையூடாக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது நடைபெறுவதில்லையெனவும் குற்றம்சாட்டினார்.

எவ்வாறாயினும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

இதற்கமைய அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், மேலும் 39 ஆயிரத்து 758 பேர் கொடுப்பனவு பெறுவோர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.