சிரியா மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை நிறுத்தியது

308 0

201609201607451720_un-suspends-all-syria-aid-convoys-after-air-strike_secvpfபோர்நிறுத்த உடன்பாடு அமலில் இருக்கும் சிரியாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டுசென்ற நிவாரண வாகனங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த நிலையில் சிரியா மக்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சிரியாவில் உள்ள பெருநகரங்களில் ஒன்றான அலெப்போ நகரில் பட்டினியால் வாடும் மக்களுக்கு ஐ.நா.சபையில் அனுப்பி வைக்கப்பட்ட கோதுமை மாவு மற்றும் மருந்து வகைகள் செம்பிறை தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று 18 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.

அங்கு வாழ்ந்துவரும் சுமார் 78 ஆயிரம் மக்களுக்கு இந்த பொருட்களை பகிர்ந்து அளிப்பதற்காக உரேம் அல் கப்ரா என்ற இடத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் நிவாரணப் பொருட்களை இறக்கி வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வானில் பறந்துவந்த போர் விமானங்கள் ஐந்து ஏவுகணைகளை அந்த கிட்டங்கியின்மீது வீசின. இந்த தாக்குதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த லாரிகளும் தீக்கிரையாகின. கிட்டங்கி கட்டிடம் சேதம் அடைந்தது. செம்பிறை அமைப்பை சேர்ந்த 12 பேரும் பலியாகினர்.

ரஷியா அல்லது சிரியா நாட்டின் விமானப்படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என கருதப்படும் நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சிரியா மக்களுக்காக அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களை ஐ.நா. சபை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் இயங்கிவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய நிவாரணப்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜென்ஸ் லாயெர்கே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘சிரியாவில் உணவு மற்றும் மருத்துவ நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்தபின்னர், அவை அனுப்பி வைக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.