சீனி மீதான வரிகள் காரணமாக அதன் சில்லறை விலையை அதிகரிப்பதற்கு சிலர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் உலக சந்தையில் கூடுதலான சீனி உற்பத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலையில் வீழ்ச்சி தென்படுவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா, தாய்லாந்து, பிரேசில் முதலான நாடுகளில் பெருமளவு கரும்பு அறுவடை செய்யப்பட்டது. இதன் காரணமாக இலங்கை இறக்குமதி செய்யும் சீனிக்கான செலவினம் கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 55 ரூபா வரை குறைந்துள்ளது.
இந்த விலை வீழ்ச்சி உள்ளூர் சீனி உற்பத்தியாளர்களுக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சீனிக்காக விதிக்கப்பட்டிருந்த 31 ரூபா விசேட வர்த்தகப் பண்ட வரியை நீக்கி, இறக்குமதி செய்யப்படும் சீனியை பொதுவான வரிக் கட்டமைப்பிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நேற்று தொடக்கம் அமுலாகும் வகையில், இறக்குமதி வரி, துறைமுக கட்டணங்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி போன்றவையைச் சேர்த்து ஒரு கிலோ சீனிக்கு 42 ரூபா வரையான வரி அறவிடப்படும்.