கிளிநொச்சி அக்கராயன் தாழ்பாலத்தினை மேம்பாலமாக மாற்றி அமைக்குமாறு அக்கராயன் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என பொது மக்களினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகிய அக்கராயன் குளம் மழை காலத்தில் நிரம்பி வழிகின்றபோது அக்கராயன் திருமுறிகண்டி வீதியில் அமைந்துள்ள தாழ் பாலம் ஊடாக தாழ் பாலத்தினை மூடி மழை வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்படும்.
இதன் காரணமாக அக்கராயன் பிரதேச மருத்துவமனையின் நோயாளர் வண்டி கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இதேபோன்று கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம், அக்கராயன் ஆரம்ப வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு அக்கராயன் கிழக்கு, அமதிபுரம் கிராமங்களின் மாணவர்கள் வருகை தரமுடியாத நிலைமை ஏற்படும். இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல தடவைகள் ஆராயப்பட்ட போதிலும் மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இனி வருங்காலம் மழை காலம் என்பதினால் குறித்த இடத்தில் மேம்பாலத்தினை அமைக்குமாறு அக்கராயன் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.