இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காஷ்மீர் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபற உள்ள ஐநா பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.