சென்னை விமான நிலையத்தில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை விரைவில் அறிமுகம்

341 0

சென்னை விமான நிலையத்தில் சோதனையால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் நவீன முறையில் பயணிகள் முகத்தை ஸ்கேன் செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

விமானநிலையங்களில் தற்போதுள்ள சோதனை நடைமுறைகளில் பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதால் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டி இருப்பதுடன் அசவுகரியங்கள் ஏற்படுகிறது.

இதனால் விமானம் புறப்படுவதற்கு முன் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரத்துக்கு முன் கூட்டியே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. முதலில் பயணிகள் சோதனை, பாஸ்போர்ட் சோதனை, லக்கேஜ் சோதனை என அடுக்கடுக்கான சோதனைகளுக்கு ஆளாக வேண்டி உள்ளது.

அதில் பயணிகள் சோதனையை எளிமையாக்க நவீன முறையை கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயணிகளை பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேன் கருவிகள் மூலம் சோதனையிடுகிறார்கள். இதில் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க பயணிகள் சோதனை எளிமையாக்கப்படுகிறது. இதற்காக ‘டிஜி யாத்ரா’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விமான நிலையத்தில் பயணிகள் நுழையும் வாயிலில் கேமராக்கள், ஸ்கேனர்கள் பொருத்தப்பட்ட இ-கேட் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் வழியே செல்லும் போது பயணியை தானாகவே ஸ்கேன் செய்து விடுவதுடன் படம் பிடித்து விடும். கண் விழிகளும் பதிவாகி விடும். இந்த எல்லையைத்தாண்டி உள்ளே நுழைந்து விட்டாலே பயணியின் முகம் ஸ்கேன் ஆகிவிடும்.

அத்துடன் பயணியின் டிக்கெட் மற்றும் வரிசை எண் போன்றவையும் பதிவாகி விடும். அடுத்த கேட்டில் நுழையும் போது அவரது அடையாளங்கள் தானாகவே சரிபார்க்கப்பட்டு விடும்.

இதுபற்றி விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடு முழுவதும் விமான நிலையங்களில் காலதாமதம் ஏற்படுவதை தடுக்கவும், பேப்பர் இல்லா நடைமுறையை அமல்படுத்தும் வகையில் ‘டிஜி யாத்ரா’ திட்டம் இரு கட்டமாக செயல்படுத்தப்படும். இதில் சென்னைக்கு 2-வது கட்டமாக அமல்படுத்தப்படும். இதற்கு தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்படுகிறது.

புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களில் முதலில் நிறுவப்படும். இது வெற்றிகரமாக செயல்பட்டால் மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூரிலும், தொடர்ந்து சென்னையிலும் அமல்படுத்தப்படும். ‘இ-கேட்’ கருவிகள் நிறுவ 2 கட்டமாக டெண்டர் விடப்படுவதால் இரு கட்டமாக நிறைவேற்றப்படுவதாக தெரிவித்தார்.

‘டி ஜி யாத்ரா’ முறையில் பயணிகளை சோதனையிடும் முன் அவர்களது அடையாள அட்டையை பதிவு செய்யும் போது பதிவு எண் கிடைக்கும். அதன் பிறகு ‘இ-கேட்’ வழியாக பயோ மெட்ரிக் முறையில் படம் பிடிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவார்கள். இதனால் விமான நிலைய நுழைவு வாயிலில் கியூவில் காத்திருக்க வேண்டியதில்லை.

Leave a comment