தீபா பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கம்

271 0

ஜெ.தீபா நடத்தும் பேரவையில் இருந்து ராஜா மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். அவர் பேரவை அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’யின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பேரவையில் அவரது நண்பர் ராஜா முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெ.தீபா தன்னுடைய பேரவையில் இருந்து நீக்கினார். நீக்கப்பட்ட ஒரு சில நாட்களில் ராஜா மீண்டும் பேரவையில் சேர்க்கப்பட்டார். மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர் பேரவையில் சேர்க்கப்பட்டதாக ஜெ.தீபா அப்போது விளக்கம் அளித்து இருந்தார்.

இந்தநிலையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ராஜா நீக்கப்படுவதாக ஜெ.தீபா நேற்று திடீரென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாக தொடர்ந்து, பேரவைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ராஜா ஈடுபட்டு வருவதால், இன்று (நேற்று) முதல் பேரவையில் இருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், ராஜா விடுவிக்கப்படுகிறார். எனவே, அவருடன் தொண்டர்கள் யாரும் பேரவை கட்டுப்பாட்டை மீறி எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், ராஜா தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அலுவலகத்திற்கு வந்தார். அவரை அங்கிருந்த தொண்டர்கள் சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் உள்ளே இருந்த ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் சத்தம் கேட்டு வெளியே வந்தனர்.

அவர்களுடன் ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னை எப்படி பேரவையில் இருந்து நீக்கலாம்? என்று அவர் கேள்வி எழுப்பினார். பதிலுக்கு ஜெ.தீபா ஆதரவாளர்கள் அவரை பேசவிடாமல், வெளியே தள்ளியபடியே இருந்தனர். தொண்டர்களை அமைதிப்படுத்திய ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் ராஜாவை அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று தனி அறையில் பேசினர்.

இதனால் குழப்பம் அடைந்த தொண்டர்கள், பேரவையில் இருந்து ராஜா நீக்கமா? இல்லையா? எத்தனை முறை தான் அவரை நீக்குவார்கள் என்று புலம்பியப்படி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Leave a comment