தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் செப்ரம்பர் மாதம் 28 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு “யுனெஸ்கோ” அந்த நாளை தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியது.
அரச செலவுகளுக்காக பொதுமக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகின்றது.இதன்போது முறைகேடான பயன்பாடுகள் மற்றும் தவறான நிதி கையாளிகை காரணமாக நாட்டு மக்களுக்கு அநீதி மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கான தடைகளும் ஏற்படுகின்றன . எனவே, அது தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை அந் நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்படுத்துவதன் ஊடாக முறைக்கேடுகளை அகற்றி விட முடியும்.
ஒவ்வொரு வருடமும் இந்த தினமானது ஏதோ ஒரு கருப்பொருளை மையமாக வைத்து அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் இதனை முன்னிட்டு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, தகவல் வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. தகவல் வாரம் செப்ரம்பர் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகளைப் பயன்படுத்தும் முறை குறித்து, பொதுமக்களுக்கு இதன் ஊடாக விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
“கிராமத்திற்கு தகவல் உரிமை” என்ற தலைப்பில், தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பிலான சட்டம் குறித்த நடமாடும் சேவைகள் இந்த வார காலத்திற்குள் நடைபெறுமெனவும், ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் தோறும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பாக பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன. . இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் உரிமை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு நிதி மற்றம் ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கம் 2017 ஆவது வருடமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.. இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேரும் வகையிலும் , இவ் தகவல் அறியும் உரிமை வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளதுடன் தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினத்தை கிராமங்களில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
வரப்புயர நீர் உயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர குடி உயரும்.
குடி உயர கோல் உயரும்.
கோல் உயர கோன் உயர்வான்.
என ஔவையார் பாடல் போல் சாதாரண குடி மக்கள் உயர்வடைந்தால் தான் அரசாங்கமும் நிலைபெறும் . எனவே, கிராம மக்கள் தமது தகவல்களை அறிந்து ஆளுமை மிக்கவர்களாக அநீதிகளை தட்டிக் கேட்டு , பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினால் அரசாங்கமானது சிறப்பாக செயற்படமுடியும் . எனவே, “கிராமத்திற்கு தகவல் உரிமை“ என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது மக்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.