காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இறந்த ராணுவ வீரர் அசோக்குமார் சிங்கிற்கு பீகார் மாநில அரசு வழங்கிய நிதி உதவியை வாங்க அவரது மனைவி மறுத்து விட்டார்.
காஷ்மீர் மாநிலம் உரியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் சிங்கும் ஒருவர் ஆவார். அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி அளிப்பதாக மாநில அரசு அறிவித்தது.
இந்த நிதி உதவியை வாங்க ராணுவ வீரரின் மனைவி சங்கீதா தேவி மறுத்து விட்டார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரருக்கு மிகக்குறைவான தொகையை அறிவித்ததால் கோபம் அடைந்து அவர் பணத்தை வாங்க மறுத்துள்ளார்.
எனது கணவர் அதிகமாக மது குடித்து விட்டு அதனால் உயிர் இழந்து விடவில்லை. அவர் நாட்டுக்காக உயிர் இழந்திருக்கிறார். அவரது உயிரிழப்புக்கு இந்த பணத்தை கொடுத்து அவமதிக்கிறார்கள். இந்த பணத்தை நாங்கள் வாங்கப் போவதில்லை. நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.
இது போன்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மாநில அரசு அவமதிக்க கூடாது. இந்த மாநிலத்தில் வாகன விபத்தில் உயிர் இழந்தால் கூட ரூ.4 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படுகிறது. ஆனால், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவருக்கு ஏதோ சிறிது பணத்தை கொடுத்து கவுரவ குறைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.
உண்மையிலேயே நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினால் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு காரணமாக இருந்த பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து பாடம் புகட்டுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
குறைவான தொகையை அறிவித்ததால் ராணுவ வீரரின் மனைவி பணத்தை வாங்க மறுத்தது முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் நிதி உதவியை ரூ.11 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.