கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம், கொழும்பு – 10, மாளிகாவத்தை, ஸ்ரீ லங்கா இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து, போதைப் பொருள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றை, 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல், இஸ்லாமிய நிலைய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
முஸ்லிம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டை முறியடிக்கும் நோக்கிலேயே, இக்கருத்தரங்கு நடாத்தப்படுவதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் வாலிபர்களில் அதிகமானோர், போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். இதனால், இவர்களில் அநேகரை நோயாளர்களாகக் காண்கின்றோம். நீதி மன்றங்களுக்குச் சென்றால், அங்கும் முஸ்லிம் இளைஞர்களே கூடுதலான அளவில் போதைப் பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளதையும் காண முடிகின்றது.
நாட்டின் மிகப் பெறுமதியான சொத்தான இந்த இளைஞர்களைப் போதைப் பொருளிலிருந்து மீட்பது, முஸ்லிம் சமுதாயத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, இக்கருத்தரங்கில் தவறாது பங்குபற்றி, பயனுள்ள ஆலோசனைகளை வழங்க முடியும் என்றும், பொதுச் செயலாளர் முஸம்மில், வேண்டுகோள் விடுத்துள்ளார்.