போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யை மாத்திரம் விற்பனை செய்ய, விரைவில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
இவ்வாறு விற்பனை செய்வது தொடர்பிலான சட்டத்தைக் கடுமையாக்குவதற்கு, தென்னைப் பயிர்ச் செய்கை சபை தீர்மானித்துள்ளது.
சந்தையில் தரம் குறைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தியைத் தடுப்பதே, இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என, தென்னைப் பயிர்ச் செய்கை சபை அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருவது குறித்து, தற்போது துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, ஒக்டோபர் மாதத்திற்குள், இச்சட்டத்தைக் கடுமையாக்க எதிர்பார்த்துள்ளதுடன், இச்சட்டம் தொடர்பில் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் விரைவில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.