திருகோணமலை, பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருகாபுரி கிராமசேவைப் பிரிவின் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையும் அவரது அலுவலக உடமைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பெண்கள் அமையம், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இராவணசேனை போன்ற அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டமானது இன்று காலை 9.00 மணியளவில் பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்தின் முன் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முரகாபுரி கிராம சேவகர் ஜமாலியாவில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த குண்டர்கள் மற்றும் அரசியல் வாதி ஒருவரும் அத்துமீறி அலுவலகத்தினுள் நுழைந்து பெண் அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அவர் மீது தாக்குதல் நடத்தி, கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.
இந் நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டார். இச் செயற்பாடானது சட்டத்தின் மீது பொது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதாகவும், இதற்கு உரிய நீதி எமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியே மேற்படி அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.