சேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி

384 0

201609211038421246_atm-centre-robbery-attempt-police-investigation-in-salem_secvpfசேலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல வணிக அலுவலகம் செயல்படுகிறது.

இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் சீரங்கப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 3 பணம் எடுக்கும் எந்திரமும், 2 பணம் டெபாசிட் செய்யும் எந்திரமும் இங்கு வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 24மணி நேரமும் பொதுமக்கள் வந்து பணம் எடுத்து செல்வார்கள். அதுபோல் பணம் டெபாசிட்டும் பலரும் செய்து வந்தனர்.

இந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஷிப்ட் முறையில் காவலாளிகள் வந்து கண்காணித்து வந்தனர். நேற்று இரவு சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த ராமசாமி (வயது 60) என்பவர் வந்து ஏ.டி.எம். மையத்தை காவல் காத்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு காவலாளி ராமசாமி தூங்கி விட்டார். இதை பயன்படுத்தி கொண்டு கொள்ளையர் சிலர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். இவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். கொள்ளையர்களில் 2பேர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து பணம் டெபாசிட் செய்ய வைத்துள்ள 2 எந்திரங்களில் ஒரு எந்திரத்தை ஆக்சா பிளேடு போட்டு உடைக்க முயற்சித்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பகுதியை மட்டுமே அவர்களால் உடைக்க முடிந்தது. பணம் இருக்கும் அறைப்பகுதியை அவர்களால் திறக்க முடியவில்லை. பின்னர் கொள்ளையர் கைரேகை பதியாமல் இருக்க மிளகாய் பொடியை ஏ.டி.எம். எந்திரத்தின் முழுவதும் வீசி விட்டு தப்பி சென்றனர்.

இன்று அதிகாலை 5மணி அளவில் அரசு போக்குவரத்து கழக டிரைவர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை முயற்சி நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதன் பேரில் உடனே அதிகாரிகள் வந்து விசாரித்தனர். பிறகு சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமி‌ஷனர் ராமசாமி, இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் வந்து விசாரித்தனர்.

கொள்ளையர்கள் மொத்தம் 2 பேர் வந்து இருக்கலாம் என்றும், தெரியவந்துள்ளது. இவர்கள் வந்து கொள்ளையடிக்க முயற்சி செய்த காட்சிகள் ஏ.டி.எம்.மையத்தில் உள்ள காமிராவில் பதிந்து உள்ளது.

இதை வைத்து கொள்ளையர் யார் என்று தற்போது விசாரணை நடக்கிறது. கொள்ளையர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள காமிராக்கள் சிலவற்றையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இருப்பினும் காமிராவில் கொள்ளையர் உருவம் பதிந்துள்ளது. இவர்கள் மூகமூடி அணிந்து இருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும் போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரிக்கிறார்கள்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-

கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தில் 2 பணம் டெபாசிட் செய்யும் எந்திரம் உள்ளது. இதில் சுமார் ரூ. 30 லட்சம் வரை பணம் வைக்கப்படும். கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

ஏ.டி.எம். மையத்தில் பணம் வைத்து இருக்கும் அறை திறக்க ரகசிய எண் உள்ளது. இந்த எண் பயன்படுத்தினால் தான் பணப்பெட்டி அறை திறக்கும். கொள்ளையர்கள் பணப்பெட்டியை உடைக்க முடியாததால் ரூ.10லட்சம் பணம் தப்பியது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழக்கம் போல் நேற்று இரவு வேலைக்கு வந்தேன். எப்போதும் ஏ.டி.எம். மையத்தின் வெளிப்புறம் அமர்ந்து கண்காணிப்பேன். நேற்றும் அப்படித்தான் அமர்ந்து இருந்தேன். கொள்ளையர் எப்படி உள்ளே போனார்கள் என தெரியவில்லை.இவ்வாறு காவலாளி ராமசாமி கூறினார்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதில் துப்புதுலங்க போலீஸ் கைரேகை நிபுணர்கள் வந்து ஏ.டி.எம். மையத்தில் பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் மிளகாய் பொடி தூவி இருந்தாலும் சில கைரேகைகள் பதிந்து உள்ளது. இதை வைத்து கொள்ளையர்கள் பழைய கொள்ளையர்களா? புதிய திருடர்களா? என்று விசாரணை நடக்கிறது.

கொள்ளையில் துப்பு துலங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் அஸ்தம்பட்டி உதவி கமி‌ஷனர் மற்றும் போலீசார் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களும் விசாரித்து வருகிறார்கள்.

கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையம் இருக்கும் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். எப்போதும் வாகனங்கள் வந்து செல்லும் பகுதி ஆகும். இந்த நிலையிலும் கொள்ளையர் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.