பொலிஸாரின் அசமந்தமே புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணத்துக்குக் காரணம்

323 0

sakalaபொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்கு விதியானது புஸ்ஸல்லாவ இளைஞன் உயிரிழந்த சம்பவத்தின் போது பின்பற்றப்படவில்லை என சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நடைபெறும்போது அனைத்து சாட்சியங்களும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தமது கடமையில் இருந்து தவறியிருந்தாலோ அல்லது ஒழுக்கத்தை மீறி நடந்திருந்தாலோ உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய சிறைகூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது நடராஜா இராமச்சந்திரன் என்ற இளைஞன் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று 23/2ஆம் இலக்க நிலையியல் கட்டளையின் கீழ் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த எம்.பியான தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த விடயங்களைக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அரசின் சார்பாக வருத்தத்தை வெளியிட்ட அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில்,

“உயிரிழந்த இந்த இளைஞர் புஸ்ஸல்லாவ ரொஸ்வெல் தோட்டம் வை.ஆர்.சீ. பிரிவில் வசிக்கும் 30 வயது தொழிலாளியாகும். அனுமதிப்பத்திரம் இல்லாமல் மஹாரா (கள்ளு) 750 மில்லி லீற்றர் மேலதிகமாக தமது கைவசம் வைத்திருந்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு எல்பொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.அதன் பின்னர் சமூகசேவை மீறலுக்காக பிடியாணையொன்று அவர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம் கடந்த 17ஆம் திகதி புஸ்ஸல்லாவ நகரில் வைத்துஅந்த சந்தேகநபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டபோது பச்சை நிற ரீ- சேட்டும் நீலநிற காற்சட்டையும் அணிந்திருந்தார் எனவும், வெளிபுற உடற் காயங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் பதிவாகியுள்ளது.

கைதிகள் தொடர்பில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணித்துப் பதிவிடவேண்டும் என்ற பொலிஸ் ஒழுங்கு விதியொன்று இருக்கின்றது. பொதுவாக சிறைக்கூடம் கண்காணிப்புக்கு தெரியக்கூடியதாகவே அமைந்திருக்கும் என்கின்ற போதிலும் இந்தப் பொலிஸ் நிலையத்தில் அப்படி அது அமைந்திருக்கவில்லை. அதுமட்டுமல்லாது, இந்தச் சம்பவத்தில் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படவேண்டிய கண்காணிப்புப்

பதிவு இதில் இடம்பெறவில்லை என்பதுடன், அந்தக் கண்காணிப்பானது ஒருமணி நேர இடைவெளியில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையில், கடமையில் இருந்த அதிகாரிக்கு சிறைக்கூடத்தில் சத்தம் கேட்டு அங்குபோய் பார்த்தபோது, சந்தேகநபர் தான் அணிந்திருந்த ரீ-சேர்ட்டை சிறைக்கூட கம்பியில் சுருக்கிட்டுஅதில் தூக்கிட்டு தொங்கியவாறு பின் கம்பிகளில் படும் வகையில் துடித்துக்கொண்டுடிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறைக்கூடத்தின் பிரதான கதவு திறக்கப்பட்டு ஏனைய அதிகாரிகளின் உதவியுடன், சந்தேகநபரை தூக்கில் இருந்து விடுவித்து, அவரது முடியாதநிலை காரணமாக மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது, அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த வைத்தியரினால் சந்தேகநபர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி கம்பளை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக நீதிவானால் நீதிவான் விசாரணைகள் நடத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரேத பரிசோதனையை நடத்தி அன்றைதினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேராதெனிய வைத்தியசாலையின் அரச சட்டவைத்திய அதிகாரிக்குப் பணிக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பிரேத பரிசோதனை கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்டிருப்பதாகவும் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அந்தப் பிரதே பரிசோதனையின்போது பகிரங்க தீர்மானமொன்று வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், உடல் பாகங்கள் அரச இராசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நீதிவான் நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து சாட்சியங்களும் நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ளன.

உதவிப் பொலிஸ் அத்தியட்சர்கள் இருவர்உள்ளிட்டஅதிகாரிகளினால் இந்தச் சம்வம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தமது கடமையில் இருந்து தவறியிருந்தால் அல்லது ஒழுக்கத்தை மீறி நடந்திருந்தால் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பவத்தின் பின்னரான முதற்கட்ட விசாரணையின் பின்னர் சம்பவ நேரத்தின் போது கடமையில் இருந்த அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி தற்காலிகமாக கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தோட்டப்புறங்களில் மட்டுமல்லாது, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு பொலிஸாருக்கு இருக்கின்றது.

பொலிஸ் தடுப்பில் இருக்கும் கைதிகள் தொடர்பிலும் பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. நான் ஏற்கனவே கூறியது போன்று 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிப்புப் பதிவுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சகல பொலிஸ் நிலையங்களிலும் சிறைக்கூடங்களில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் வசதிகள் பற்றி ஆராயுமாறும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.