தமிழகத்தில் தமிழ் அழிந்து கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் தமிழ் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது எனறு தமிழக கலைஞர் கு.புகழேந்தி தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள 15 பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் மாபெரும் தமிழ் விழா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது:
தமிழீழ மண்ணில் எனக்குப் பல அனுபவங்கள் உள்ளன. நான் இங்கு பல தடவைகள் வந்துள்ளேன். நாம் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் உள்ளோம். கடந்த காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.
இந்த நிகழ்வு தமிழ் இனத்தின் வரலாற்றையும், புகழ்களையும் வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழர்க் கலை என்பது உலகின் மூத்த குடிகளின் கலையாகும். நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம். அதுமட்டுமல்லாது இருப்பதையும் இழந்து கொண்டிருக்கின்றோம்.
தமிழர் கலையை மீட்டெடுக்கப் போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் நாட்டில் தமிழ் அழிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் தமிழீழத்திலே தமிழ் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அதற்காக முதலில் தமிழீழ மக்களுக்கு நன்றிகளைக் கூறவேண்டும்.உலகெங்கும் தமிழ் பரவியுள்ளது.
அதற்கு மூல காரணம் ஈழத்துத் தமிழர்களே. ஏனெனில் அவர்கள் கடந்த காலங்களில் இடப்பெயர்வுகளைச் சந்தித்து உலகின் பல நாடுகளில் வாழ்கின்றனர். இதனால் உலகம் முழுவதும் தமிழ் பரவியுள்ளது. அதுமட்டுமல்லாது தமிழரின் கலை, கலாசாரமும் பரவியுள்ளது. இதன் விளைவாக தமிழரின் வாழ்வியல் அரசியல் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாம் இன்று தோற்றிருக்கலாம் பின்னடைவு களைச் சந்தித்திருக்கலாம். இவை அனைத்தும் நாம் முன்னோக்கிப் பயணிப்பதற்கான பாடமாகவே நாங்கள் பார்க்க வேண்டும். நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சி மாவடடத்துக்கு வந்திருந்தேன். அங்கு எத்தனையோ நிகழ்வுகள் உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றிருந்தது. நான் இப்போதும் அதே உணர்வினைப் பார்க்கின்றேன் -– என்றார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமனற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் சயந்தன், கஜதீபன் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
https://youtu.be/07E7bh5qlo8