எழுகிறது தமிழ்.. நிமிர்கிறது தாயகம்! – புகழேந்தி தங்கராஜ்

578 0

pukalenthi-thangarajகுறுக்கே கிடக்கிற கடல் வெறும் 25 மைல் தான் என்பதால் ‘கடலின் மறுபுறம் நடந்த தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறி விட்டோமே’ என்கிற குற்றவுணர்ச்சி தமிழகத்தைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும்! இது போதாதென்று எட்டித் தொட்டு விடுகிற தொலைவிலேயே இருப்பதால் கடலுக்கு இந்தப்புறம் இருக்கிற ‘அரசியல்வியாதிகள்’ அந்தப் புறத்தையும் எளிதில் தொற்றி விடுகிற அவலம். அதைப் பார்க்கிற போது பயமாயிருந்தாலும் எமது தாயக மக்களின் புத்தெழுச்சி நம்பிக்கையளிக்கிறது.

சுயநல அரசியல் தலைமைகள் இந்த இனத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்பதற்கு 2009 ஒரு மோசமான உதாரணம். தமிழகத்தின் அன்றைய அரசியல் தலைமை உறுதியுடன் எதிர்த்திருந்தால் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை சர்வநிச்சயமாகத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். அந்தத் தலைமை அப்படி எதிர்க்கத் துணியாததுடன் கவிழ்ந்தடித்துப் படுத்துக்கொண்டும் விட்டது.

தமிழ்நாட்டு அரசியல் தலைமையின் சண்டித்தனத்துக்குச் சுளுக்கெடுக்கிற விதத்தில்தான் தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்டான் முத்துக்குமார். அவன் மூட்டிய தீ தமிழகமெங்கும் பரவியது. அந்தத் தீவிர போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்ய குறுக்கு வழிகளைக் கையாண்டது தலைமை. கொட்டுகிற மழையில் மனிதச் சங்கிலி 4 மணி நேர ‘சாகும்வரை’ உண்ணாவிரத அறப்போர் என்று நாளுக்கொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அவர்கள் குப்புறத்தள்ளியதுடன் நின்றுவிடாது குழியும் பறித்தது இப்படித்தான்!

2009-ல் தமிழகத்து அரசியல் தலைமை என்ன செய்ததோ அதையேதான் இப்போது செய்கிறது இலங்கைக்குள்ளிருக்கும் தமிழர் அரசியல் தலைமை. இனப்படுகொலைக்கு நீதிகேட்கிற குரல்கள் வலுக்கும் போதெல்லாம்‘நாங்களும் அதையேதான் கேட்கிறோம்’ என்கிறார்கள் அவர்களும்! இப்படி ‘சேம் சைடு கோல்’ போட்டுப் போட்டே ஏழு ஆண்டுகளை நகர்த்திவிட்டார்கள்.

புலம்பெயர் உறவுகளின் தொடர் போராட்டங்களால் நீதியை ஒரேயடியாக மறுத்துவிட முடியாத நிலையில் அதை நீர்த்துப் போக வைக்கிற வேலைகளில் இறங்கினார்கள் தலைவர் பெருமக்கள். ‘இனப்படுகொலை – என்று சொன்னால் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுவிடும்’ என்றார்கள். ‘இனப்படுகொலைக்கு நீதி கேட்டால் நல்லிணக்கம் என்ன ஆவது’ என்று கேட்டார்கள். மைத்திரியும் ரணிலும் நடத்தும் நல்லாட்சி நாடகத்தைப் போலவே தமிழ்த் தலைகளின் இந்த நல்லிணக்க நாடகமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

2009-ல் ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ்மக்கள் சிங்கள ராணுவத்தால் அநீதியாகக் கொன்று குவிக்கப்பட்டபோது நசுங்கிவிடாத இலங்கையின் நல்லிணக்கம் ‘நடந்தது இனப்படுகொலைதான்’ என்ற உண்மையைச் சொல்வதால் நசுங்கிவிடப் போகிறதா? ‘நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்’ என்று வலியுறுத்துவதால் நசுங்கிவிடப் போகிறதா?

நிஜத்தில் இனப்படுகொலைக்கான நீதியும் இலங்கையின் நல்லிணக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இது சாத்தியமில்லையெனில் அதுவும் சாத்தியமில்லை. வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறார். இன்றுவரை இந்த யதார்த்தத்தை ஏற்க முன்வரவில்லை தலைவர் பெருமக்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையெதையோ பேசுபவர்கள் இதைப்பற்றி வாயே திறப்பதில்லை.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். புனிதவதி முதல் இசைப்பிரியா வரை எண்ணற்ற சகோதரிகள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடூரங்களுக்கு யார் காரணமென்று விசாரிக்கவே கூடாது என்றால் என்ன அர்த்தம்? ‘வக்கிரம் பிடித்த அந்தக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தக் கூடாது’ என்று அடம்பிடித்தால் என்ன அர்த்தம்?

மனித உரிமை மீறல்களிலும் போர்குற்றத்திலும் இனப் படுகொலையிலும் ஈவிரக்கமில்லாமல் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினரைச் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு இலங்கை சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தால் தான் நல்லிணக்கம் உருவாகும் என்று நம்புகிறார்களா திருவாளர்கள் சம்பந்தனும் சுமந்திரனும்! தாங்கள் நம்புவது போதாதென்று நம்மையும் அப்படி நம்பச் சொல்கிறார்களா?
‘ஒரே நாளில் நல்லிணக்கத்தை கொண்டுவந்துவிட முடியாது’ என்கிறார் இலங்கை அதிபர் மைத்திரிபாலா. 2009க்குப் பிறகு மகிந்த ராஜபக்ஷே பேசிய அதே வசனத்தைத்தான் இப்போது மைத்திரி பேசுகிறார். இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு இலங்கையில் யார் யார் இதைப் பேசப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

சிங்களத் தலைவர்களால் ஒரே நாளில் சாதிக்கக் கூடிய காரியம் நல்லிணக்கத்தை குழிதோண்டிப் புதைப்பது மட்டும்தான்! 1957, 1965, 1983, 1987, 2009 என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதை அவர்கள் நிரூபித்திருக்கின்றனர்.

நல்லிணக்கத்தை உருவாக்குகிற நோக்கத்துடன் போடப்பட்ட எந்த உடன் பாட்டையாவது அவர்கள் மதித்ததுண்டா? பண்டா – செல்வா ஒப்பந்தத்தைக் காலில் போட்டு மிதித்தவர்கள் தமிழர்களா சிங்களர்களா? டட்லி – செல்வா ஒப்பந்தம் என்ன ஆயிற்று? அவ்வளவு ஏன்… இந்தியப் பிரதமரான ராஜீவ்காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தமிழர் தாயகமான வடக்கையும் கிழக்கையும் இணைத்து விட்டார்களா? இந்த லட்சணத்தில் இலங்கையின் எந்த லட்சணத்தை நம்பி ‘நல்லிணக்கம் உருவாகிவிடும்’ என்று நம்புகிறார்கள் சம்பந்தன் போன்ற மூத்த தலைவர்கள்!

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைக்க சென்ற ஆண்டு இறுதியில் ஜெனிவாவில் ஒப்புக்கொண்டது இலங்கை. அதைப்பற்றிக் கவலைப்படாமல், ‘சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று பிரகடனமே செய்கிறார் அதிபர் மைத்திரிபாலா. ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிக்கே பொறுப்பேற்க மறுக்கும் இலங்கை, தான் செய்த ஓர் இனப்படுகொலைக்கு எப்படி பொறுப்பேற்கும்? இதைக் கூடவா தமிழ்த் தலைகளால் புரிந்துகொள்ள முடியவில்லை!

மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? அதனால்தான் சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவெடுத்திருக்கிறது முதல்வர் விக்னேஸ்வரனையும் உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவை. இந்த மாதம் 24ம்தேதி (செப்டம்பர் 24இ சனிக்கிழமை) யாழில் நடக்க இருக்கிற ‘எழுக தமிழ்’ பேரணி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன் நின்றுவிடாது, உள்ளூர் அரசியல் தலைமைகளுக்கும் உண்மையை உணர்த்த வேண்டும்.

தனிப்பட்ட முறையில் சிங்களத் தலைவர்களுடன் ‘நல்லிணக்கத்தைப்’ பேண வேண்டிய தேவை சில தமிழ்த் தலைகளுக்கு இருக்கிறது. அதனால்தான் ‘‘நடந்த இனப்படுகொலைக்கு சட்ட ரீதியான மாற்றுவழிகளில் சர்வதேச விசாரணை சாத்தியம் தான்’’ என்று விக்னேஸ்வரன் சொன்ன பிறகும் அதை வழிமொழிய முன்வரவில்லை அந்தத் தலைமைகள். அவர்கள் செய்யத் தவறியதைத்தான் எமது தாயக மக்கள் நிறைவேற்ற இருக்கின்றனர். விக்னேஸ்வரன் சொன்னதை செப்டம்பர் 24ம் தேதி, அவர்கள் வழிமொழிய இருக்கிறார்கள்.

தமிழர் தாயகத்தில் சிங்களமயமாக்கலை நிறுத்து!
போர்க்குற்றங்கள் – இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்து!
தமிழ்த்தேசம், தமிழரின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை வழங்கு!
என்கிற முழக்கங்களை யாழ் பேரணி எழுப்ப இருக்கிறது.

தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தை அகற்று, தமிழர் நிலங்களை தமிழரிடம் ஒப்படை, காணாது போனோரைக் கண்டுபிடி, அரசியல் கைதிகளை விடுதலை செய், சம உரிமையுடனும் சுய கௌரவத்துடனும் எமது அடையாளங்களை இழக்காமலும் வாழ அனுமதி…. என்று யாழ் பேரணி வலியுறுத்த இருக்கிறது.

‘சர்வதேச அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிந்து விடமாட்டோம்’ என்று அடிக்கடி அறிவிக்கிறது இலங்கை. இத்தனைக்கும் சர்வதேசத்தின் தயவில் வண்டி ஓட்டுகிற நாடு அது. செப்டம்பர் 24ம்தேதி பல்லாயிரக்கணக்கில் திரள இருக்கும் எமது தாயக மக்கள் ‘எவரது தயவுமின்றி எங்கள் நீதியை நாங்களே பெறுவோம்’ என்று அந்த நொண்டிக் குதிரைக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறார்கள். ‘நடந்தது இனப்படுகொலைதான் சர்வதேச விசாரணை நடத்து’ என்று பிரகடனம் செய்ய இருக்கிறார்கள்.

தங்களது உரிமைகளையும் நியாயங்களையும் தாங்களே பெறுவதென்கிற முடிவுக்கு எமது தாயக மக்கள் வந்து விட்டிருக்கும் இந்தச் சூழலிலாவது ‘தலைவர் பெருமக்கள்’ தமது அறிதுயிலைக் கலைத்து விழித்தெழுவது நல்லது.
இலங்கையின் புதிய அரசியலமைப்பு எப்படியிருக்கும் என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. பெரும்பான்மை இனத்துக்கு முதுகு சொரிகிற ஒரு வளவளா கொழ கொழா அரசியலைமைப்பையே இலங்கை மீண்டும் ஏற்குமென்றால் விக்னேஸ்வரன் எச்சரித்திருப்பது போல் சென்ற 70 ஆண்டுகளைப் போலவே அடுத்த 70 ஆண்டுகளும் திட்டமிட்ட தமிழின அழிப்பு தொடரும்.

விக்னேஸ்வரன் எந்த உள்நோக்கத்துடனும் இதைச் சொல்லவில்லை. கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் தனது அச்சத்தை வெளிப்படுத்துகிறார். ‘அரசியலமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்’ ‘எங்களுக்குத் தேவையான தீர்வுகள் இவைதான்’ என்று திட்டவட்டமாகத் தெரிவிக்காவிட்டால் இதுதான் நடக்கும். தமிழர் அரசியல் தலைமைகள் அதைச் செய்யத் தவறியதால்தான் அந்தப் பொறுப்பை தமிழ்மக்கள் பேரவை என்கிற மக்களின் அமைப்பு கையில் எடுத்திருக்கிறது.

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் யாழ்ப்பாணத்தில் நடக்க இருக்கிற ‘எழுக தமிழ்’ பேரணி, குறிப்பிடத்தக்கது. ‘இனப்படுகொலை என்று வெளியிலிருந்துதான் குரல் வருகிறது… அது நடந்த நிலத்திலிருந்து ஒருவராவது அப்படிப் பேசுகிறார்களா?’ என்று நக்கலடித்த தமிழ்ப் பத்திரிகையுலகப் பிதாமகன்களின் மூக்கை உடைக்கிற விதத்தில் பல்லாயிரக்கணக்கான தாயக உறவுகள் வலுவான குரலில் உண்மையை உரைக்க இருக்கிறார்கள். விழலுக்கு நீர் இறைப்பவர்கள் இப்போதாவது இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!

செம்மணி வெளியில் ஈரம் சுமந்துவந்த காற்றுக்கிடையே கனத்த இதயத்துடன் நின்று எங்கள் கண்மணி கிருஷாந்தியை நினைத்துக் கலங்கிய ஒரு மழைநாள் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. ‘எமது தாயக மக்கள் தமக்கான நீதியைப் பெறத் தவறக் கூடாது’ என்று அப்போது நினைத்தேன். இப்போது ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பான நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கிற நிலையில் ‘எமது தாயக மக்கள் தமக்கான நீதியைப் பெறத் தவறவே மாட்டார்கள்’ என்கிற நம்பிக்கை வலுப்பெறுகிறது. உங்களைப் போலவே 25 மைலுக்கு அப்பாலிருந்து 24ம் தேதிக்காக நானும் காத்திருக்கிறேன்.

அலைகடலென வருக, ஆர்ப்பரித்து வருக – என்கிற ஆர்ப்பாட்டமான வார்த்தைகளோ வசனங்களோ நமக்குத் தேவையில்லை.
இது நமக்கான பேரணி….

தொடர் இன்னல்களுக்கு முடிவு கட்டுவதற்காக தாயக மக்களாகிய நீங்களே நடத்துகிற பேரணி….
வாக்கு கேட்பதற்காக நீங்கள் வரவில்லை…. நீதி கேட்பதற்காக வீதிக்கு வருகிறீர்கள்.
ஒட்டுமொத்த உலகுக்கும் நமது வலியையும் வேதனையையும் எடுத்துச் சொல்ல வருகிறீர்கள்.
யாழ் மண்ணில் ஒன்றுதிரண்டு உரத்த குரலில் உண்மையை உரைக்க இருக்கிறீர்கள். நமக்கான நீதியைப் பெற நிமிர்கிறீர்கள்.
இது நமக்காக நாமே நடத்துகிற வேள்வி. இதற்காக இணைந்து நிற்காமல், வேறெதற்காக நாம் இணைந்து நிற்கப் போகிறோம்?