வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டதாக கூறி எட்டு தென்னிலங்கை மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்த எட்டு மீனவர்கள் வடமராட்சி கடற்பரப்பிற்குள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து, பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவை பொறுப்பு வாய்ந்த தரப்பினர்கள் தெரியப்படுத்த வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.