பாக். பிரதமர் அலுவலகத்தின் 70 ஆடம்பர கார்கள் ஏலம்

271 0

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. 

பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டார். பிரதமர் பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார்.

கவர்னர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் பயன்படுத்தும் புல்லட் புரூப் உள்ளிட்ட ஆடம்பர கார்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான 102 சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட்டு பணம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று முதல்கட்ட ஏலம் நடந்தது. அதில் 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 8 புல்லட் புரூப் கார்கள். 4 மெர்சிடஸ்பென்ஸ் கார்கள் உள்ளிட்டவை அடங்கும். அவை அனைத்தும் மார்க்கெட் விலையை விட கூடுதலாக ஏலம் போனது.

அடுத்த கட்டமாக பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ள 4 ஹெலிகாப்டர்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேலும் 8 எருமை மாடுகளும் ஏல பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அவை முன்னாள் பிரதமர் நாவஸ் செரீப் ஆட்சி காலத்தில் வாங்கப்பட்டவை.

 

Leave a comment