உயிருக்கு ஆபத்து இருப்பதால் என்னை வேறு சிறைக்கு மாற்றுங்கள்- நீதிபதியிடம் நிர்மலாதேவி முறையீடு

327 0

வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் நிர்மலாதேவி முறையிட்டார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 13-ந் தேதி 1160 பக்கங்களை கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிகையையும், கடந்த 7-ந்தேதி 200 பக்கம் கொண்ட 2-வது குற்றப்பத்திரிகையையும் விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நேற்று விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து குற்றப்பத்திரிகை நிர்மலா தேவி உள்பட 3 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வழங்கப்பட்டது.

அப்போது நிர்மலாதேவி நீதிபதியிடம், வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே என்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை கேட்ட நீதிபதி கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறு கூறினார். விசாரணை 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Leave a comment