நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை செயற்றிறன் மிக்க வகையில் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இச்செயன்முறை இன்னமும் வினைத்திறனுடையதாக மாற்றப்பட வேண்டும் என தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க தெரிவித்தார்.
அத்துடன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினைப் பொறுத்த வரையில் இரண்டு பிரதான தரப்பினர் உள்ளனர். அதில் தகவல் வழங்கும் பிரிவினர் தற்போது போதியளவில் அறிவூட்டப்பட்டுள்ளனர். எனினும் தகவல் கோரும் பிரிவினரிடம் போதுமான விழிப்புணர்வற்ற நிலையே காணப்படுகின்றது. அவர்களை அறிவூட்டும் வேலைத்திட்டங்களை எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆகும். அதனை முன்னிட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியை தகவல் அறியும் உரிமை வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பிலும், தகவல் அறியும் உரிமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பிலும் விளக்கமளிக்கும் வகையில் நேற்றைய தினம் ஜானகி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.