முதல் வகுப்பு கைதிகள் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்துக்கொள்ள சிறை விதிகள் அனுமதிக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.
இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கமளித்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதாவது:-
முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம். சிறையின் உள்ளே கலைகள் வரைய படிக்கும் கைதிகள் சிறை அதிகாரிகள் அனுமதியுடன் இதுபோல வரைந்து கொள்கின்றனர்.
சில அதிகாரிகள் உதவியுடன் செல்போன்கள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. என தெரிவித்தார்.