ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் என லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஆய்வு நிறுவனமான “இகொனமிஸ்ட் இன்டர்லிஜன்ட்ஸ் யுனிட் (Economist Intelligence Unit (EIU))” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாட்டின் அரசியலில் ஓரளவு செல்வாக்கு இருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த செல்வாக்கு படிப்படியாக குறைந்து கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை உருவாக்குவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2020ம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்கும்.
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என்றும், பெப்ரவரி மாதம் நடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள், பொதுஜன பெரமுனவின் பிரபல்யம் மற்றும் மக்கள் மத்தியில் இருக்கின்ற பாரிய அரச எதிர்ப்பு மனநிலையும் பிரதிபலிக்கின்றதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.