சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலிபனின் 31வது நினைவு தினம் மிகவும் எழுச்சியாக அனுஸ்டிக்கப்பட்டது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.10 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர் ஆலய வடக்கு வாசல் வீதிப் பகுதியில் கற்பூரமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
பெற்றோர்கள், வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மற்றும், மாநகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு ஈகச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலி செலுத்தினர்.