இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வினை வழங்குவதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பாசிக்குடாவில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தமிழர் பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியா ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் துரைராஜசிங்கம் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் இச்சந்திப்பில், மட்டக்களப்பில் இந்திய தூதரகத்தின் உப அலுவலகம் ஒன்றையும் திறக்குமாறு தாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இச்சந்திப்பில், தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், ஞா.சிறிநேசன், க.கோடிஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபை தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.