முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடக்காத ஒன்றை நினைத்து கனவு காண்கின்றார். நிமிடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசும் அவருடைய கருத்துக்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது பற்றி கவலையடையவும் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தனது சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு போதும் இடம்பெறாது. மீண்டும் ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு பொது மக்கள் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை.
இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடக சந்திப்பொன்றில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நிலைபாடும் அதுவாகவே காணப்படுகின்றது. மீண்டும் குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார். நடைபெறாத ஒரு விடயத்தை நினைத்து அவர் கனவு காண்கின்றார்.