மக்கள் விடுதலை முன்னணியால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட 20வது அரசியல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிசிர ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் 20வது அரசியல் திருத்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது மாற்றுக் கொள்கைகளுக்கான மத்தியநிலையம் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக இந்நாட்டு மக்கள் பல தடவைகள் தமது விருப்பத்தை தெரிவித்திருப்பதாக கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முதல் ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக மக்கள் வரம் பெற்றதாகவும், நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிப்பதன் ஊடாக மக்களின் இறைமை மீறல் இடம்பெறுவதில்லை என்றும் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
இதன்பின்னர் மனு மீதான மேலதிக விசாரணைகள் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.