இலங்கையின் முப்படைகளின் பிரதானி விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிடுகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரின் விசாரணைகளில் நேரடியாக தலையிடுவதன் காரணமாக வேறு வழியில்லாமல் இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணையை கோரவேண்டியுள்ளது என சுமந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியொருவரே இந்த விவகாரத்தில் தலையிடுவதன் காரணமாக உள்ளுர் நீதிப்பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாத நிலை காணப்படுவதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ரவிராஜ் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகயிருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜயகுணவர்த்தன மீது சிஐடியினர் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிடுகின்றார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ரவிராஜ் படுகொலை தொடர்பில் பல வழக்குகள் இன்னமும் நீதிமன்றின் முன்னாள் உள்ளன, இந்நிலையிலேயே ஹெட்டியாராச்சி தலைமறைவானார் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் பிரதானியொருவர் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் மெக்சிக்கோ சென்றிருக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் முப்படைகளின் பிரதானி தொடர்பில் தற்போது எழுந்துள்ள குழப்பநிலைக்கு சிறினேச பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி படையினர் விவகாரங்களில் தலையிட்டுள்ளமை பொறுப்புக்கூறலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நீதிசெயற்பாடுகளில் ஜனாதிபதியொருவர் தலையிடுவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ள சுமந்திரன் முப்படைகளின பிரதானி விவகாரம் உயர்மட்டத்தில் காணப்படும் அரசியல் தலையீடுகளை புலப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை படையினரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அடிப்படையிலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன் ஜனாதிபதியே விசாரணைகளில் தலையிடுவதால் உரிய நீதி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக ஐநா தலையிடவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.