நாளை பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை

260 0

மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் நாளைய தினம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (13) விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது பிரதிவாதிகளான பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது பிரதிவாதி சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் வேறு வழக்கு ஒன்றில் ஆஜராகியுள்ளதால் இந்த வழக்கை மற்றொரு தினத்திற்கு ஒத்தி வைக்குமாறு அவரின் கணிஷ்ட சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

அதன்படி இந்த வழக்கை நாளை தினத்திற்கு ஒத்தி வைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டார்.

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் காணி ஒன்றில் உள்ள அனுமதியற்ற குடியிருப்பாளர்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை வழங்குவதற்காக ஜெராட் மெண்டிஸ் எனும் வர்த்தகரிடம் 64 மில்லியன் ரூபா நிதி கேட்டு அச்சுறுத்தியதாக மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான நரேஷ் பாரிக் என்பவர் தற்போது வௌிநாட்டில் இருப்பதால் அவர் இன்றி இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a comment