ஊவா மகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, தனக்கு ஒலிவாங்கி வழங்கப்படவில்லை என்று தெரிவித்து சபை மேசை மீதேறி, தமது எதிர்ப்பினை வெளியிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தார்.
அவைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் ஊவா மாகாண சபையின் அமர்வு சபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. அதன்போதே குறித்த மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, தான் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கப் போவதாக கூறி சபையில் பிறிதொரு ஆசனத்தில் அமர்ந்தார். அந்த ஆசனத்தில் அவருக்கான ஒலிவாங்கி வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் அவைத் தலைவரின் உத்தரவின் பிரகாரம் அவருக்கு கை ஒலிவாங்கியொன்று வழங்கப்பட்ட போதிலும் அதுவும் பழுதடைந்து காணப்பட்டமையினாலேயே திஸ்ஸ குட்டியாராச்சி,, கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, சபை அமர்வு மேசையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இப் போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சபைத் தலைவர் ஏ.எம்.புத்ததாச பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. இதனால் சபையில் அமளிதுமிளி ஏற்பட்டது.
இதையடுத்து அவைத் தலைவரால் சபையின் அமர்வு அரை மணி நேரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீளவும் அமர்வு ஆரம்பமானபோது ஊவா மாகாண சபையின் பிரதித்தலைவர் ஜீ. ஆர். விமலதாச மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஐ.தே.க. உறுப்பினர்கள் 13 பேர் கையொப்பமிட்டு அவைத் தலைவரிடம் கையளித்தனர்.