முருங்கன் வைத்தியசாலைக்கு மேலதிக வைத்தியர்களை நியமிக்க கோரிக்கை

252 0

மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை அதிகமாக காணப்படுவதோடு, வைத்தியர்கள் ஓய்வில்லாமல்  பணிபுரிகின்றனர்.

இவர்கள் விடுமுறைகளில் சென்றால் அனைவரும் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சென்றிருந்தார்.

இதன் போது முருங்கன் ஆதார வைத்தியசாலைன் அபிவிருத்தி குழு உறுப்பினர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

சாதாரணமான நோய்களுக்கும் நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை மாற்றம் பெற எமது முருங்கன் வைத்தியசாலைக்கு  மேலதிகமாக நான்கு வைத்தியர்களாவது இன்னும் தேவை.

அத்துடன் மகப்பேற்று  குளிரூட்டிகள் இல்லை.மின்சார வசதிகள்  பிறந்தை குழந்தைக்கு இளம் வெப்பம் தரும் வோமர் போன்ற வசதிகள் கூட ஆதார வைத்தியசாலையில் இல்லை.

சில இடங்களில் பிரதேச வைத்தியசாலைகளில் தேவைக்கு அதிகமாகவே வைத்தியர்கள் உள்ளார்கள்.

உதாரணமாக யாழ்ப்பாணம் , தெல்லிப்பளை பருத்தித்துரை , ஆதார வைத்தியசாலைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் உள்ளதாக அறிய முடிகிறது.

அத்துடன் தாதியர்கள் பற்றாக்குறை உட்பட அனைத்து வசதிகளையும் எமது வைத்தியசாலைக்கு  செய்து தாருங்கள்.

அல்லது நாம் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தெரிவித்த சுகாதார அமைச்சர்,

போராட்டத்தின் மூலமே மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும். அப்படி போராடும் பொழுது உங்கள் அருகில் எனக்கும் ஒரு இடம் தாருங்கள் .

மக்களுக்காக வீதியில் இறங்கி போராடியாவது அவர்களின் உரிமைகளை பெற்று கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். வால் பிடிப்பவர்கள் மத்தியில் மக்களுக்காக சண்டை பிடிக்கும் அமைச்சர் நான்.

முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு மாதத்திற்குள் இரண்டு வைத்தியர்களை பெற்றுக் கொடுப்பது என் நோக்கம். இது பற்றி உரிய தரப்புடன் பேசப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் அளவில் 250 வைத்தியர்களின் விண்ணப்பத்தில்  நாற்பது வைத்தியர்கள் வடமாகாணத்திற்கும் ஆறு அல்லது ஏழு பேர் மன்னார் மாவட்டத்திற்கும் தரப்படும். அதில் முருங்கனுக்கு என இரண்டு வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

அத்துடன் தற்பொழுது பணிபுரியும் வைத்தியர்களுக்கான இடமாற்றம் வரும் பொழுது அந்த இடத்திற்கான வைத்தியரை பெற்றவுடன் இடமாற்றத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

நான் மாகாணம் மற்றும் மத்தியில் கேட்டது போல்  வைத்தியர்கள் கிடைக்காத பட்சத்தில் மக்களுடன் நானும் இணைந்து போராடுவேன் என்று அமைச்சர் ஜி.குணசீலன்  தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்,முருங்கன் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் , முருங்கன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த சந்திப்பை தொடர்ந்து குறித்த வைத்தியசாலையின் நிலமைகளை நேரடியாக பார்வையிட்டதோடு, அங் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலை தரப்பினரின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ள பாதீப்புக்கள் குறித்தும் முருங்கன் வைத்தியசாலை தரப்பினரின் கவனத்திற்கு அமைச்சர் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment