திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசர திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம், 8 ஆம் திகதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவித்து இன்று வரை சீரான நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக தெரிவித்த நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை,
திருகோணமலை நகரத்திற்கு செல்லும் நீரின் அளவை அதிகரிப்பதற்கான திருத்த வேலையை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர் விநியோகத்தை ஆரம்பித்தபோதும் நீர் அழுத்தம் குறைவாக காணப்படுகிறது.
இதனால் பெரும்பாலான இடங்களுக்கு நீர் கிடைக்கவில்லை.
மேலும் மீண்டுமொரு இடத்திலுள்ள நீர் குழாயில் எதிர்பாராத விதமாக வெடிப்பு ஏற்பட்டமையினால் நீர்விநியோகம் மீண்டும் தடைப்பட்டுள்ளது. இன்று இப்பணிகளை நிறைவு செய்ய முயற்சித்து வருகின்றோம்.
மேலும் குடிநீர் மிக அவசரமாக தேவைப்படும் மற்றும் உயரமான பகுதிகளுக்கு, தாம் பவுசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தது.
எவ்வாறானபோதும் 2 நாள் என அறிவித்து ஒருவாரம் வரை நீர்விநியோகம் சீராக வழங்காமையால் பொதுமக்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோருகின்றனர்.