விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவுக்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளை காணலாம்.
இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி சென்னையில் 2 ஆயிரத்து 520 சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடம் பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த உரிமம் மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.
பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தின் சுற்றுப்புறத்தில் இல்லாததையும், முதலுதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.
பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும்.
பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.
விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலமாக செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்