தமிழர்கள் தோற்றுப் போன இனம் என்றோ, வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத இனம் என்றோ,ஒரு தோற்றம் ஏற்படுவதை விரும்பவில்லை என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதிக்கு பின்னர், வட மாகாண சபை அமைச்சர் சபை கூடவில்லை எனவும், இவ்வாறானதொரு நிலைமை இந்தியாவில் கூட, ஏன் இலங்கையில் கூட நடக்க வாய்ப்பில்லை எனவும், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, தனிப்பட்ட ரீதியில் மரியாதை இருப்பதாகவும், ஆனால் அரசியல் ரீதியாக மரியாதை இல்லை எனவும், அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கு முதலமைச்சர் பதவியேற்கும் போது, நல்ல மனிதனாகத்தான் இருந்தார் என, சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இந்த நிலையில், மாகாண சபை உறுப்பினர்கள், பத்திரிகை விளம்பரத்திற்காக பல பிரேரணைகளை கொண்டு வருகின்றனர் எனவும், ஆனால் பிரேரணை குறித்து, அவர்களுக்கே விளக்கம் தெரியாது எனவும், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள,வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.