பயங்கரவாதத்துக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த 62 சதவீத இந்தியர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘பியு ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்பு, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு கருத்து கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது. அதில், 2 ஆயிரத்து 464 இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு இருந்தது.
ஐ.எஸ். இயக்கம், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக 52 சதவீத இந்தியர்கள் கவலை தெரிவித்தனர். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை வீழ்த்த ராணுவ பலத்தை பயன்படுத்துவதுதான் சிறந்த வழி என்று 62 சதவீத இந்தியர்கள் கூறினர். ஆனால், ராணுவ பலத்தை பெரிதும் நம்புவது, வெறுப்புணர்வை உண்டாக்கி, பயங்கரவாதத்தை அதிகரித்து விடும் என்று 21 சதவீதம்பேர் கூறினர்.
பாகிஸ்தான் தொடர்பான பிரதமர் மோடியின் கொள்கைக்கு 22 சதவீதம்பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். பா.ஜனதா ஆதரவாளர்களிலேயே 54 சதவீதம்பேர், பாகிஸ்தான் குறித்த மோடியின் அணுகுமுறையை ஏற்கவில்லை. இந்திய ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று 63 சதவீதம்பேர் தெரிவித்தனர்.